19 February, 2011

எகிப்து மக்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்...!

எகிப்தில் ஏற்பட்ட 17 நாள் புரட்சி 30 ஆண்டுகால சர்வாதிகாரியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியது. அது மட்டும் இன்றி நைல் நதிக்கரையில் இருந்து மக்கள் புரட்சியின் செய்திகளைக் கண்ட உலகம் குறிப்பாக அரபகம்  மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. இந்த பூமியில் முதன்முதலாக நாகரீகம் கற்றுக்கொடுத்த  நைல் சமவெளிப் புரட்சியின் மூலம் புதிய இலக்கணத்தை பூவுலகுக்கு கற்றுக்கொடுத்தது.


2011 பிப்ரவரி 11ஆம் தேதி, உலக சரித்திரப் பக்கங்களில் நிரந்தர இடத்தைப் பிடித்தது. இஸ்லாமிய வரலாற்றில், நீங்காஇடம் பெற்ற வீரத்தியாகி ஹசனுல்  பன்னா அவர்கள் உயிர்த்தியாகம் செய்த 12&ம் தேதி எகிப்து, அன்னாரின் தியாகத்தின் பலனை கண்ணாற்கண்டது. மாலை நேர தொழுகைக்குப் பிறகு சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கின் நீண்டகால விசுவாசியான உமர் சுலைமானின் தொலைக்காட்சி அறிவிப்பு சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டதை உறுதி  செய்தது. முப்பது வினாடிகளுக்கும் குறைவாகவே அவரின் அறிவிப்பு அமைந்திருந்தது. முப்பது ஆண்டுகாலம் அந்த நாட்டை கட்டி ஆண்ட ஒரு சர்வாதிகாரி வீழ்ந்த சேதியை முப்பது வினாடிக்கும் குறைவான நேரத்திற்குள் அறிவித்த விநோதத்தை என்னவென்று சொல்வது? எல்லா சர்வாதிகாரிகளின் வீழ்ச்சியும் இவ்வாறு தான் அமையுமோ ?

1981 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் அன்வர் சாதாத் கொல்லப்பட்டார். அன்று துணை அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் அதிபரானார். 2011 பிப்ரவரி 10ஆம் தேதி முபாரக்கின் குடும்பத்தினர் பத்திரமாக எகிப்தின் செங்கடல் கரையோர சுற்றுலா நகரான ஷரம்  அல்ஷேக் நகருக்கு இடம் பெயர்ந்தனர். சர்வ பலம் பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு இருந்தும் என்ன பயன்? படைபலம் மிக்க இஸ்ரேல் உற்ற துணையாகஇருந்தும் என்ன பலன்? மக்கள் எழுச்சி ஏற்பட்டு விட்டதென்றால் இரவோடு இரவாக ஓடவேண்டியது தான். ஹோஸ்னி முபாரக் என்ற அரபுலக சர்வாதிகாரியின் ஆட்சிக்கு தஹ்ரீர் என்ற சுதந்திர சதுக்கத்தில் முடிவுரை எழுதப்பட்டு விட்டது.
2009 ஜூன் நான்காம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா, எகிப்து தலைநகர் கெய்ரோவில்  இஸ்லாமிய உலகத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை புதிய தொடக்கமாக்குவோம் என அழைப்பு விடுத்திருந்தார் அல்லவா! அந்த தொடக்கம் எந்த தொடக்கம் என்பதை எகிப்து விடுதலைப் போராளிகள் ஒபாமாவுக்கு உணர்த்தியுள்ளதாகவே உலகம் கருதுகிறது. மக்கள் எழுச்சிக்கு முன்னால் சாம்ராஜ்யம் சரியும் காட்சியை உலகம் கண் முன்னால் கண்டது. இறைவன் மிகப்பெரியவன் என முழங்கிய தஹ்ரீர் சதுக்கப் போராளிகள்  இந்தப் புரட்சிக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளை வாழ்த்தி முழங்கினர். எந்த சர்வாதிகாரியின் முடிவும் இனி அதிரடியாகவே முடியும்; அதோ  கதியில் முடியும் என போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான மஹ்மூத் எல்ஹேத்தா அறிவித்தார்.

எகிப்து இப்போது விடுதலைக் காற்றை சுவாசிக்கிறது என அறுபது வயதான சப்வான் அபூசாத் தெரிவித்தார். செப்டம்பர் 11, பிப்ரவரி 11  ஆகிய தேதிகள் 30 ஆண்டுகால வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவையாகத் திகழ்கின்றன.  1990 செப்டம் பர் 11 ஆம்தேதி நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பிப்ரவரி 11 ஈரானில் எழுந்த புரட்சிக்கு குமைனி தலைமை தாங்கினார்.

தன்னெழுச்சியாக எகிப்து புரட்சி நடைபெற் றதாகக் கூறப்பட்டாலும், இதில் கொள்கை ரீதியான ஒரு படை  முக்கியப் பங்கு வகித்தது. ஆம் இஹ்வான்கள் எகிப்தின் மீள் கட்டமைப்புக்கு முக்கியப் பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1928ஆம் ஆண்டு ஆறு கொள்கைப் போராளிகளுடன் சூயஸ் நகரில் தொடங்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு 10 லட்சம் இஹ்வான்கள் எகிப்து முழுவதும் உருவானார்கள். இலட்சியத்திற்காக எழுந்த அந்தத் தூய இயக்கம் அரபுலகின் தவப்புதல்வன் என்று தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கமால் அப்துல்நாசர் மற்றும் அவரது பின்னோடிகளான அன்வர் சாதாத் மற்றும் ஹோஸ்னி முபாரக் உள்ளிட்ட ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற எகிப்து நாடாளுமன்றத் தேர்தலில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 சதவீத தொகுதிகளைக் கைப்பற்றினர் இஹ்வான்கள்.



88 தொகுதிகளை வென்ற இஹ்வான்கள் அரசியலில் முக்கிய இடத்தினைப் பெற்றாலும் சுயேச்சை யாகப் போட்டியிட்டனர். சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகின்றனர். அடுத்து எகிப்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நகர்வுகளில் இவர்களது பங்கு பிரதானமாக இருக்கும் என கருதப்படுகிறது. இன்று துணை அதிபராக இருக்கும் உமர் சுலைமான் எகிப்தின் முன்னாள் உளவுத்துறை தலை வராகவும் சிஐஏவின் தரகராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக எகிப்தில் களமாடிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை நாடு கடத்திய சேவையை செய்துள்ளார். சிறைவாசிகளை சித்திரவதைகள் செய்வதில் மிகவும் தேர்ந்தவராக விளங்கினார். அவர் ஒவ்வொரு நாளும் இஸ்ரேலுடன் தனி தொலைபேசியில் உரையாடும் வழக்க முடையவர் என விக்கி லீக் அம்பலப்படுத்தியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக முடிவுக்கு வரமுடியாது. தஹ்ரீர் சதுக்கத்தில் கூட்டம் கூடுவதைத் தடுக்க முற்படுவது, தேர்தல் ஆறு மாதம் கழித்து என அறிவித்துள்ளது போன்றவை சந்தேகத்தை வரவழைத்தாலும் ஹோஸ்னி முபாரக்கை அகற்றிய மக்களுக்கு இவர்கள் ஒரு பொருட்டாக கருதப்பட மாட்டாது என்பது திண்ணம்.

தஹ்ரீர் சதுக்கம் எழுப்பிய வினாக்களுக்கு அரபகம் நாளை என்ன பதில் கூறப்போகிறது?  இந்தப் புரட்சி தங்களுக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஹோஸ்னி முபாரக்கிற்கு  ஆதரவாகப் பேசிய சவூதி அரேபியா இன்று புரட்சியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள் ளது. அல்ஜீரியா மற்றும் ஏமன் மக்கள் திரள் போராட்டத்தின் மூலம் தன்னை நிரூபிக்கத் துடிக்கிறது. உலகமே உன்னிப்புடன் பார்க்கும் இந்தப் புரட்சியில் பல்வேறு முக்கிய அம்சங்களும் படிப்பினைகளும் உள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. ஹோஸ்னி முபாரக் மட்டுமே எகிப்தின் முழுமையான வில்லன் என சித்தரிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஹசனுல் பன்னா, செய்யது குத்துப் போன்றவர்களின் உயிரைக்குடித்த சர்வாதிகார சக்தி களான நாசர், அன்வர் சாதாத் போன்றவர்களை மறக்க முடியாது. அன்னை ஜைனப் அல் கஜ்ஜாலி போன்றவர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திய அந்தக் கொடூர ஆட்சிகளை அகற்றிவிட்ட  எகிப்து உண்மையான விடுதலையை அனு பவிக்க கொஞ்சம் காத்திருக்க வேண்டியதிருக்கும். அரபகத்தில் பல நாடுகளுக்கு சுதந்திர உணர்வை எகிப்து புரட்சி வழங்கி இருப்பினும் இந்தப் புரட்சிதான் நாளை சுதந்திர பாலஸ் தீனம் உருவாக முக்கியக் காரணியாக இருக்கும் என கருதப்படுகிறது. இன்றைய  எகிப்து புரட்சியை வாழ்த் தும் அதேவேளையில் சுதந்திர பாலஸ் தீனத்தினை வரவேற்கத் தயாராவோம்.

எகிப்து மக்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்...


அமெரிக்காவும், இஸ்ரேலும் தலையிடாத அரபுலகம்! அஹ்மதிநிஜாத் விருப்பம்

‘எத்தனை தந்திரங்களை ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினாலும்,  மக்கள் எழுச்சியின்  வாயிலாக அமெரிக்காவும் இஸ்ரேலும் அற்ற அரபுலகை உருவாக் கலாம் என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியும்‘... ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் 32-வது ஆண்டினையொட்டி  டெஹ்ரானின் ஆசாத்(சுதந்திர) சதுக்கத்தில் நடந்த பேரணியில் உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

‘இப்பிராந்தியத்தில் எகிப்து மற்றும் துனீசியாவின் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக் கூடாது. ஆப்கானில் இவர்கள் என்ன செய்தார்கள்? இப்பிராந்தியத்தில் ஏன் இவர்கள் ராணுவ தளங்களை அமைக்கின்றார்கள்?’ மஹ்மூத் அஹ்மத் நிஜாத் வினா விடுத்தார்.

இரண்டு நாடுகள் என்று கூறும் பொழுதே இஸ்ரேலின் மேலாதிக்கத்திற்காக அமெரிக்கா செயல்படுவதாக நிஜாத் குற்றஞ்சாட்டினார்.

எகிப்திய புரட்சியை வாழ்த்தியநிஜாத், உஷாராக இருக்குமாறு எகிப்து மக்களை கேட்டுக்கொண்டார். சுதந்திரத்தை வென்றது உங்களுடைய உரிமையாகும். உங்களை ஆளப்போவது யார் என்பதை உறுதி செய்வது நீங்கள் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
-அபுசாலிஹ்