03 March, 2011

அயோத்தியத் தீர்ப்பு இரண்டாவது கரசேவை?

அறுபதாண்டு கடந்து
அறிவிக்கப்பட்டது
‘அயோத்தியத் தீர்ப்பு’
(சில எழுத்துக்களை
மாற்றிப் படித்தாலும்
தவறில்லை)
நீதிமன்றத்தை
அவமதிப்பது
பெருங்குற்றம்
நீதிமன்றம்
நீதியை அவமதிப்பது…?
சட்டம்
ஆக்கப்பட்டது
சடம்
பிரிக்கப்பட்டது
இடம்
இனி
சட்டம்
எங்கே இருக்கும்
ஆட்சியகத்திலா?
அருங் காட்சியகத்திலா?
இந்த
கட்டப் பஞ்சாயத்தின்
சட்டப் பஞ்சாயத்துகள்
சதிராட்டம் பார்த்து
கட்டப் பஞ்சாயத்துகள்
கவுரவம் பெற்றன
நல்லோர்களின்
நம்பிக்கைகள்
கருகக் கருக…
இடித்துத் தள்ளப்பட்டன
6.12.1992
அன்று
ஒரு மசூதி
30.09.2010
அன்று நீதி
அது காவிகள் நடத்திய
முதலாவது கரசேவை
இது
கறுப்புகள் நடத்திய
இரண்டாவது கரசேவை!
நீதிமான்களே
ஒன்றாக இருக்கவே
விரும்புகிறோம்
மூன்றாகப்
பிரித்து விடாதீர்கள்
பதை பதைத்துப்
படபடக்கிறது
தேசியக் கொடி
சட்டப்படி
சில
குற்றத்திற்கு
மரண தண்டனை
இப்போதெல்லாம்
நடந்துவிட்ட
குற்றப்படி
சட்டத்திற்கே
மரண தண்டனை
தாமதிக்கப்பட்டபோதெ
நீதி
வஞ்சிக்கப்பட்டு விட்டது.
இப்போது குற்றவாளிகளால்
வரவேற்கப்பட்டுள்ளது
நீதிமன்றங்கள்
யாருக்காக?
நூல்களை அறிந்தவர்களுக்கா?
நூல்களை அணித்தவர்களுக்கா?
ஆராய்ச்சி மணியை
அடித்த,
மாட்டுக்கும்
நீதி தந்தானாம்
மனுநீதி.
இப்போதும்
மணி அடிப்பவர்களுக்கே
கிடைக்கிறது
உயர்நீதி!!
ஜென்ம பூமிகளை
உறுதி செய்கிற
ஜென்மங்களின்
பூமி இது..
நீதி அநீதி
இங்கு
யாவும் பொது
வாய்மைக்கல்ல
மிரட்டுகிற
வலிமைக்கே
எல்லாம்
பாபரி மஸ்ஜித் நிலம்
என்ற
எளியோரின் அப்பம்
பங்கு வைக்கப்பட்டுள்ளது..
வானரம் ஆயிரமாய்
வரவேற்றுத் தாவுகி்ன்றன..
இது தேசத்தின்
மனசாட்சிக்கு
வைக்கப்பட்ட
அக்கினிப் பரீட்சை
மிக்க
மேலானவனிடம்
செய்வோம்
மேல் முறையீடு
பொறுமை காப்போம்
பொறுமையாளர்களோடு
இருக்கும்
அதிபதி
அவனல்லவா
இறுதி
நீதிபதி!
- ஹாஜா கனி