அறுவைச் சிகிச்சையின் மேற்கொள்ளும் பொழுதோ, விபத்தின் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு 'இரத்த தானம்' செய்வது அவசியமாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நமது இந்திய தேசத்தின் மொத்த இரத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும். ஒரு யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும். ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.
ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை உள்ளது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் 10 க்கும் அதிகமான நபர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும்
இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம்.
சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருந்தாலும், அநேகர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் அவ்வமைப்புகள் அவ்வப்போது இரத்தக்கொடை நிகழ்ச்சிகளை நடத்தும் போது இரத்த தானம் செய்கின்றனர்.
இரத்த தான முகாம்களிலிருந்து பெறப்படும் இரத்தங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாவதாகவும் குற்றம் சாட்டு நிலவுகிறது.
இந்தியாவில் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைகளுக்காக இரத்தம் பெறுவதற்கு ஏஜென்டுகளை நியமித்து அவர்கள் பணத்திற்காக இரத்தம் கொடுப்பவர் களிடமிருந்து நடைமுறைகளைப் பின்பற்றாமலும் இரத்தம் கொடுப்பவரின் கடைசியாக கொடுத்த தேதி, உடல் தகுதி போன்றவற்றையெல்லாம் பின்பற்றாமலும் இரத்தத்தை எடுத்து கொள்வதாகவும் குற்றச்சாட்டும் உண்டு.
தற்போது நடைப்பெற்றுள்ள முறையான சோதனை செய்யாமல் கர்பிணி பெண்ணுக்கு HIV தொற்றுள்ள இரத்தத்தை செலுத்திய நிகழ்வானது இரத்த தானம் செய்பவர்கள் மத்தியிலும் அதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் மத்தியிலும் ஒருவித அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இரத்தம் கொடுத்தவரே தமக்கு HIV இருப்பதை அறிந்து அது குறித்து வெளிப்படையாக பேசாதிருந்தால் எந்த தவறும் செய்யாத பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை இந்த சமூகம் சந்தேக கண் கொண்டு பார்த்திருக்கும்.
நம் குடும்பத்தினர், உறவினர்கள் என அறுவை சிகிச்சைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அதே துறையில் இருக்கும் சில நல்ல மருத்துவர்களால் மருந்துகள் மட்டுமே போதும் என பரிந்துரைக்கப்பட்டு குணமடைவதையும் நாம் காண்கிறோம்.
இந்நிலையில் தான் மருத்துவத் துறையில் வெளிப்படை தன்மை அவசியம் தேவை. நாள்தோறும் பெருகி வரும் விசித்திர நோய்களும், இளவயது திடீர் மரணங்களும் பெருகி வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் அறம் சார்ந்து தீமைக்கெதிராக அரசாங்கங்கள் மருத்துவ துறைக்கு அவசர சிகிச்சை அவசியம் மேற்கொள்ள தீவிரம் காட்ட வேண்டும்.
-A.H.M. ஹமீது ஜெகபர் மரைக்கார்
