காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பொருளாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான அகமது படேல் கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (நவ.25) மரணமடைந்திருக்கிறார்.
குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளர்.
குஜராத்தின் பரூச் தொகுதியில் இருந்து மூன்று முறை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், ஐந்து முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு 28 வயதாக இருந்தபோது பரூச் மக்களவைத் தொகுதியில் இவரைப் போட்டியிட வைத்தார் இந்திரா காந்தி. பின்னர் 1980 மற்றும் 1984 தேர்தல்களிலும் அங்கு மீண்டும் போட்டியிட்டு வென்றார்.
1984இல் அகில இந்திய காங்கிரசின் துணைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் அகமது படேல். பின்பு 1986ஆவது ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார் அகமது படேல்.
1985இல் ராஜீவ்காந்திக்கு அவர் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார்.
ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தபோது அவருக்கு எவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்தாரோ அதே அளவு நம்பிக்கைக்குரியவராக சோனியா காந்திக்கும் அவர் இருந்ததாகவே பார்க்கப்பட்டார்.
சோனியா காந்திக்கு அரசியல் ஆலோசகராக இருந்த போது கட்சியில் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்கினார்.
1988இல் காந்தி-நேரு குடும்பம் நடத்தும் ஜவகர் பவன் அறக்கட்டளையின் செயலாளர் ஆக்கப்பட்டார். இதன் பின்பு காந்தி- நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக உருவானார்.
கடைசியாக அகமது படேல் 2017இல் மாநிலங்களை அவைக்கு தேர்வானார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியவரின் நெருக்கடியால், வழக்கமாக போட்டியின்றித் தேர்வாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பல ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு நடந்தது.
பாஜகவினரால் மாடலாக வர்ணிக்கப்படும் குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று அகமது படேல் மாநிலங்களை அவைக்கு மீண்டும் தேர்வானது அப்போது தேசிய அளவில் பெரிதும் பேசப்பட்டது குறிப்படத்தக்கது.